திங்கள், 24 ஆகஸ்ட், 2009

இந்தியா 2015 லேயே வல்லரசாகிவிடும்! விஜய்

அரசியலுக்கு நிச்சயம் வருவேன். ஆனால் யோசித்து நிதானமாகத்தான் வருவேன் என நடிகர் விஜய் கூறினார்.

புதுவையில் நடிகர் விஜய் ரசிகர்கள் நற்பணி மன்றத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இலவச கம்ப்யூட்டர் மையம் ஒன்றையும் அவர் திறந்து வைத்தார். விழாவில் புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம், நடிகர் விஜய் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மகன் சினிமாவில் அறிமுகம்! ரசிகர்கள் விஜய்யிடம் கேள்வி கேட்க, அவர் பதில் சொல்வது போல் நிகழ்ச்சி அமைக்கப்பட்டது.

உங்கள் குழந்தைகளும் படங்களில் நடிக்க விருப்பம் தெரிவித்தால் அனுமதிப்பீர்களா? என்ற ரசிகர் ஒருவரின் கேள்விக்கு விஜய் இப்படி பதில் கூறினார்: "என் குழந்தைகள் இப்போது பள்ளியில் படித்து வருகிறார்கள். எதிர்காலத்தில் என்ன ஆக வேண்டும் என்பது அவர்களது விருப்பம். அவர்கள் எதை விரும்பினாலும் அதற்கு நான் உறுதுணையாக இருப்பேன். புதிய படமான வேட்டைக்காரனில் ஒரே ஒரு நிமிட நடன காட்சியில் எனது மகன் சஞ்சய் ஆடி இருக்கிறான்".

ஒரே மாதிரி கெட்டப்பில் வருகிறீர்களே... எம்ஆர்ராதா, சிவாஜி மாதிரி எப்போது மாறுபட்ட தோற்றங்களில் வருவீர்கள்?, என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், "இவர்கள் அனைவரும் வயதான பிறகுதான் மாறுபட்ட வேடத்தில் நடித்து உள்ளனர். நான் தற்போது இளைஞன். கொஞ்ச நாட்கள் ஆகட்டும். அப்புறம் உங்கள் விருப்பப்படி மாறுபட்ட கேரக்டரில் நடிக்கிறேன்",
என்றார்.

இந்தியா 2015 லேயே வல்லரசாகிவிடும்! இளைஞர்களை பார்த்து 2020-ல் இந்தியா வல்லரசு நாடாக மாறும் என்று அப்துல்கலாம் கூறி இருக்கிறார். அதற்கு என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்விக்கு, "பெற்றோர்கள் கஷ்டப்பட்டு குழந்தைகளை படிக்க வைக்கிறார்கள். அவர்கள் நன்றாக படித்து வெளிநாட்டில் போய் தங்கி விடுகிறார்கள். இந்தியாவில் பெற்ற கல்வியை கொண்டு வெளிநாட்டில் வேலை செய்கிறார்கள். வெளிநாட்டிற்கு செல்வதை நிறுத்தி விட்டு நம் நாட்டில் வேலை செய்தால் இந்தியா 2015-லேயே வல்லரசாக மாறிவிடும்", என்றார் விஜய்.

தனது 50வது படம் குறித்தும் அரசியல் பிரவேசம் பற்றிய கேள்விக்கும் விஜய் கூறிய பதில்: எனது ஐம்பதாவது படமான வேட்டைக்காரன், திருப்பாச்சி, சிவகாசி, கில்லி, போக்கிரி' படங்களை விட வித்தியாசமாக இருக்கும். அந்த வகையில் எனது 50-வது படம் யாரும் எதிர்பாராத வகையில் பிரமாண்டமாக அமையும். நான் அரசியலுக்கு வர இஷ்டமில்லை என்று கூற மாட்டேன். எனக்கு அரசியலில் உடன்பாடு உண்டு. தற்போது எனக்கு வயது போதாது. இது அரசியலுக்குள் நுழைவதற்கான தருணம் என்று நான் நினைக்கவில்லை. அரசியலுக்கு வர நிறைய கற்று கொள்ள வேண்டும். அரசியல் மிகப் பெரிய கடல். அதில் மூழ்கி நீந்தி கடந்து, கரைக்கு வர வேண்டும். அதற்கு நான் என்னை தயார்படுத்தி கொள்ள வேண்டும். எனவே நிதானமாக யோசித்து அரசியலுக்கு வருவேன், என்றார் விஜய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

talk me