
இலங்கை தமிழர் தாக்கப்படுவதை கண்டித்து ஒரு தமிழன் என்ற முறையில் என் உணர்வைக் காட்ட வேண்டிய நேரம் இது.
எனவே திட்டமிட்டபடி சென்னையில் நாளை மறுநாள், ஞாயிற்றுக்கிழமை, நானும் என் ரசிகர்களும் உண்ணாவிரதம் இருக்கிறோம் என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.நெல்லையில் வில்லு படப்பிடிப்பில் நிருபர்கதளிடம் விஜய் கூறியதாவது:
இலங்கையில் கொல்லப்படும் நம் தமிழ்ச் சகோதர சகோதரிகள் உயிர் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்கள் அங்கு பூரண சுதந்திரத்துடன் வாழ வகை செய்யப்பட வேண்டும். போர் நிறுத்தம் இப்போதே முடிவுக்கு வர வேண்டும். இந்த நோக்கங்களுக்காகத்தான் சென்னையில் திரைத்துறையினர் நடத்திய உண்ணாவிரதத்தில் பங்கேற்றேன்.அதற்காக பிரதமருக்கு தந்தி அனுப்புமாறு எனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தேன். அதை ஏற்று ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பாரத பிரதமருக்கு தந்தி அனுப்பியதற்கு நன்றி.இலங்கையில் தமிழ் மக்கள் தங்களின் சொந்த இடத்தை விட்டு விட்டு உயிரைக் காப்பாற்ற காடுகளுக்குள் பதுங்கு குழிகளில் தஞ்சம் புகுந்து தவித்துக் கொண்டிருக்கின்றனர். இலங்கை தமிழ்ச் சகோதர, சகோதரிகளின் படுகொலையை கண்டித்து தமிழ் உணர்வை காட்ட வேண்டிய கட்டாயம், நேரம் வந்துள்ளது என்பதை உணர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்த வேண்டும் என எனது நற்பணி மன்றத்தினர் வேண்டுகோள் விடுத்தனர்.
அதை ஏற்றுத்தான் வருகிற 16ம் தேதி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியம் அருகில் உண்ணாவிரதம் இருக்கிறோம் அதாவது காவிரிப் பிரச்சினைக்காக ரஜினி உண்ணாவிரதமிருந்த இடம். இதில் நான் கலந்து கொள்வேன்.
இதேபோல மாவட்ட தலை நகரங்களிலும், மற்ற நகரங்களிலும் நடக்கும் உண்ணாவிரதத்தில் நற்பணி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்க வேண்டும். சட்டம்-ஒழுங்கிற்கு பங்கம் ஏற்படாமல் உண்ணாவிரதம் நடத்த வேண்டும்.நமது நோக்கம் இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும். அங்குள்ள தமிழர்கள் காக்கப்பட வேண்டும். எனவே உண்ணாவிரதத்தின் போது துயரத்தின் அடையாளமாக கறுப்புத் துணியுடன் மவுனமாகவும், அமைதியாகவும், அகிம்சை வழியில் உணர்வுகளை பதிவு செய்ய வேண்டும் என்றார் விஜய்.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அதில்,என் நெஞ்சில் குடியிருக்கும் அன்பான ரசிகர்-ரசிகைகளே, நண்பர்களே, வணக்கம். நடிகர் சங்கம் சார்பில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தின்போது நான் கேட்டுக்கொண்டபடி, இந்திய பிரதமருக்கு பல்லாயிரக்கணக்கான தந்திகளை கொடுத்து எனக்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறீர்கள். அதற்கு என் நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.என் இயக்கத்தை சேர்ந்த ரசிகர்கள் திரைப்படங்களின் ரசனையையும் தாண்டி சமூக அக்கறையோடு பல சமயங்களில் செயல்பட்டு இருக்கிறீர்கள். குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்டபோதும், கார்கில் போரில் ராணுவ வீரர்கள் பாதித்தபோதும், சுனாமியால் தமிழ் மக்கள் தவித்தபோதும் பெரிதும் உங்களை ஈடுபடுத்திக்கொண்டு பல உதவிகளை செய்து இருக்கிறோம்.அதைப்போலவே இப்போதும் இலங்கை தமிழ் சகோதர-சகோதரிகளின் படுகொலையை கண்டித்து, தமிழ் உணர்வை காட்ட வேண்டிய கட்டாயமும், நேரமும் வந்திருக்கிறது என்பதை உணர்ந்து, நம் நற்பணி இயக்கத்தின் சார்பில் ஒரு உண்ணாவிரத போராட்டம் நடத்த வேண்டும் என்று அனைவரும் எனக்கு வேண்டுகோள் விடுத்து இருந்தீர்கள்.ஆகவே வரும் 16ம் தேதி நற்பணி இயக்கத்தினரோடு சென்னையில் ஒருநாள் உண்ணாவிரதம் இருந்து ஈழ தமிழர்கள் மீது நமக்கு இருக்கும் பரிவையும், பாசத்தையும் வெளிக்காட்ட நான் முடிவு செய்திருக்கிறேன். காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரை உண்ணாவிரதம் நடைபெறும்.
அதே நாளில் தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட தலைநகரங்களிலும், அத்தனை நகரங்களிலும் நீங்களும் உண்ணாவிரதம் இருந்து உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
Vijay and his fans protest

Vijay in pearl city
ரசிகர்கள் ரகளை-விஜய் படப்பிடிப்பு 2 முறை ரத்து
நேற்று மணப்பாடு சர்ச் ரோட்டில் படப்பிடிப்பு தொடங்கியது. இதனை அறிந்த ஏராளமான ரசிகர்களும், பொதுமக்களும், நடிகர் விஜயை பார்க்க அங்கு கூடினர். இதனால் அங்கு படப்பிடிப்பு நடத்த முடியவில்லை. இதையடுத்து படத்தின் இயக்குநர் பிரபுதேவா அந்த பகுதியில் நடைபெறும் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு மணப்பாடு பாலத்தில் படப்பிடிப்பை நடத்தினார். அங்கும் ரசிகர்கள் திரண்டனர். இதனால் அங்கு நடந்து கொண்டிருந்த படப்பிடிப்பும் ரத்து செய்யப்பட்டது. பின்னர் மணப்பாட்டை அடுத்த பெரியதாழை பைபாஸ் ரோட்டில் சண்டை காட்சி படமாக்கப்பட்டது. இதில் நடிகர் விஜய் கார் ஓட்டி கொண்டு வருவது போலவும், அவரை பின் தொடர்ந்து பல கார்கள் வருவது போலவும் படமாக்கப்பட்டது. இந்த பகுதியிலும் ரசிகர்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசாரும் படப்பிடிப்பு குழுவினரும், ரசிகர்களிடம் படப்பிடிப்பு முடிந்தவுடன் விஜய் உங்களை சந்திப்பார் என தெரிவித்தனர். இருந்தும் ரசிகர்கள் விஜயை பார்க்க முண்டியடித்துக் கொண்டு சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் நடிகர் விஜய் ரசிகர்களை சந்தித்து பேச முயன்றார். அப்போது அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். மேலும் அவரை ரசிகர்கள் பின்னோக்கி தள்ளினர். இதையடுத்து பாதுகாப்பு நின்ற போலீசார் விஜய்யை பத்திரமாக மீட்டு காருக்கு அனுப்பி வைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
talk me