ஓர் கடிதம் ஈழத்து பிஞ்சு இதயங்களிலிருந்து.
தமிழ் நாட்டின் முன்னனி நடிகரான உங்களுக்கு அரசியலில் இறங்கும் ஆர்வம் வந்துள்ளது. அதனை நாம் வாழ்த்தி வரவேற்கிறோம். ஏனெனில் விஜயை நாம் எங்களில் ஒருவராகவே இதுவரை கருதி வருகிறோம்.
ஆனால் இன்று ஒரு செய்தி வெளிவந்துள்ளது விஜய் அவர்கள் டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் அமைப்பின் இளைஞரணித் தலைவரும், சோனியாவின் மகனுமான ராகுல் காந்தியுடன் நடிகர் விஜய் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
இது தமிழர்கள் அனைவரின் மனதையும் மிகவும் வேதனைப் படுத்தியுள்ளது இச்செய்தி உண்மையானால் உங்களுடைய தமிழ் உணர்வுள்ள தன்மானமுள்ள ரசிகர்கள் அனைவரும் ஏமாற்றமடைவார்கள் .
இதுவரை விஜய் அவர்களை தங்கள் வீட்டுப் பிள்ளையாக நினைத்துப் போற்றியவர்கள் நாம்.
"தமிழர்களுக்கு ஆதரவானவர்கள் தூற்றப்படக்கூடாது தமிழர்களுக்கு எதிரானவர்கள் போற்றப்படக்கூடாது"
தமிழ் ரசிகர்களா? தமிழர் விரோத காங்கிரசா? விஜய் அவர்களே முடிவு உங்களின் கையில்.
...........................................................................................................................................................................
நடிகர் விஜய் காங்கிரசில் சேர முன்வந்தால் அதனைத் தமிழர்கள், குறிப்பாக புலம் பெயர்ந்த தமிழர்கள் வரவேற்க மாட்டார்கள் என்பதோடு அதனை முழுமூச்சாக எதிர்ப்பார்கள் என்பதை முன்கூட்டியே சொல்லி வைக்க விரும்புகிறோம். என கனடா, ரொறன்ரோவிலுள்ள தமிழ் படைப்பாளிகள் கழகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கனடா தமிழ் படைப்பாளிகள் கழகம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-
தமிழ் நாட்டின் முன்னனி நடிகர் விஜய் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கப் போவதாக முன்னர் செய்திகள் வந்தன. இப்போது அவர் இந்திய காங்கிரஸ் கட்சியில் சேரப்போவதாக செய்திகள் வருகின்றன. காங்கிரஸ் கட்சியில் சேரும் பட்சத்தில் அவருக்கு மேலவை உறுப்பினர் பதவியும் வழங்கப்படும் எனத் தெரிகிறது.
அரசியலில் யாரும் பங்கு கொள்ளலாம். நடிகர்களும் குடிமக்கள் என்பதால் அவர்களுக்கும் அரசியலில் பங்கு கொள்ள முழு உரிமை உண்டு. அது மக்களாட்சி முறைமைக்கு மிகவும் நல்லது. ஆனால் நடிகர் விஜய் காங்கிரசில் சேர முன்வந்தால் - அப்படியொரு முடிவு எடுத்தால் - அதனைத் தமிழர்கள், குறிப்பாக புலம் பெயர்ந்த தமிழர்கள் வரவேற்க மாட்டார்கள் என்பதோடு அதனை முழு மூச்சாக எதிர்ப்பார்கள் என்பதை முன்கூட்டியே சொல்லி வைக்க விரும்புகிறோம்.
மத்தியில் பதவியில் இருக்கும் இந்திய காங்கிரஸ் - திமுக கட்சிகளது ஆட்சியின் போதுதான் தமிழீழத்தில் வரலாறு காண முடியாத இனப்படுகொலை அரங்கேறியது. இந்தியாதான் போர் ஆயுதங்கள், ராடர்கள், புலனாய்வு, உளவு, நிதி, பயிற்சி என்று எல்லாவற்றையும் இலங்கை அரசுக்கு கொடுத்து உதவியது. இதனை இந்தியா அவ்வப்போது மறுத்து வந்தாலும் அண்மையில் இந்திய பாதுகாப்பு துணை அமைச்சர் பல்லம் ராஜு சிறீலங்காவின் தற்காப்புக்கு உலங்குவானூர்திகள் உட்பட ஆயுதங்களை வழங்கியதாகக் கூறியுள்ளார். உலங்குவானூர்திகள் எப்படி தற்பாதுகாப்புக்குப் பயன்படுத்தலாம் என்பது எமக்கு விளங்கவில்லை.
சென்னை ஆவடியில் உள்ள கனரக வாகனங்கள் தொழிற்சாலையில் ஆகஸ்ட் 24, 2009 (திங்கட்கிழமை) "பீஷ்மா' ரக டாங்கிகளை இராணுவத்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உரையாற்றும் போதே பல்லம் ராஜு இக் கருத்தினைத் தெரிவித்துள்ளார். இந்த ஆயுததளபாடங்களை இரு நாடுகளிடையே ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தங்கள் அடிப்படையில் தான் வழங்கினோம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் 2007 யூன் மாதத்தில் புதுடில்லியில் நடைபெற்ற முப்படைத் தளபதிகள் மாநாட்டில் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி இந்தியா புலிகளை அழிக்க சிங்கள - பவுத்த இனவெறி பிடித்த இலங்கை அரசு கேட்கும் அனைத்து விதமான உதவிகளையும் வழங்குவோம் எனப் பகிரங்கமாக அறிவித்திருந்தார்.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நியயப்படுத்துவதற்கு விடுதலைப் புலிகளின் விமானப் படை இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிறதாகச் சொன்னார். இந்த மாதம் 3 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி வான்படைத் தள ஓடுபாதையை விரிவாக்குவதற்கு இந்தியா மேலும் ஒரு கோடி 17 லட்சம் ரூபாவுக்கான காசோலையை இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் வழங்கியிருக்கிறார்.
இந்தியா - இலங்கை இருதரப்பு உறவுகளையும் ஆழப்படுத்துவதற்கும் உறுதிப்படுத்துவதற்குமான செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தத் திட்டத்துக்கு இந்தியா உதவி வழங்கியுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே தமிழின அழிப்புத்தான் இந்திய காங்கிரஸ் - திமுக கட்சிகளின் குறிக்கோள் என்பது தெட்டத் தெளிவாகியுள்ளது.
இந்தப் பின்னணியில் நடிகர் விஜய் தமிழினப் படுகொலைலை அரங்கேற்றிய சோனியா காந்தியோடும் ஈழத்தமிழர்களைப் பற்றி அவதூறாகப் பேசி வரும் இராகுல் காந்தியோடும் கைகோர்க்க எத்தனிப்பது அவர் தமிழீழத் தமிழர்களுக்குச் செய்யக் கூடிய அதிக பட்ச இரண்டகம் என நாம் கருதுகிறோம். அதனைப் புலம்பெயர் தமிழர்கள் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.
எனவே நடிகர் விஜய் நடித்த அல்லது நடித்து வெளிவர இருக்கும் படங்களைப் புறக்கணிக்கும் போராட்டத்தில் உலகளாவிய அளவில் இறங்குவோம் என்பதை முன் கூட்டியே அவருக்கும் சம்பந்தப்பட் படத் தயாரிப்பாளர்களுக்கும் சொல்லி வைக்கிறோம்.
என்று அதில் குறிப்பிட்டிருந்து.
இவ் கடிதங்கள் பாதிக்குமேயானால் வருந்துகிறோம்.
வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
talk me