புதன், 22 அக்டோபர், 2008

எல்லா வாசகர்களுக்கும் என் இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்! விஜய்.



சென்னை பிரசாத் ஸ்டூடியோ. விஜய் நடிக்கும் "வில்லு' படத்திற்காக பிரமிக்க வைக்கும் வகையில் பிரம்மாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது.
அந்த அரங்கத்தில் நயன்தாராவுடன் எக்ஸ்பிரஸ் வேகத்தில் நடனம் ஆடிவிட்டு கேரவனுக்கு வந்தார் விஜய். பார்ப்பதற்கு ஒரு கல்லூரி மாணவரைப் போல் இருக்கிறார். வில்லு அவர் நடிக்கும் 48-வது படம்.
"வில்லு' பற்றி?
""நானும், பிரபுதேவாவும் இணைந்த "போக்கிரி' பெரிய வெற்றியைப் பெற்றதால் எங்களது காம்பினேஷனில் உருவாகும் இப்படத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் "வில்லு' யூனிட் கடுமையாக உழைத்து வருகிறது. என்னோட மற்ற படங்களில் இல்லாத அளவிற்கு இதில் நிறைய வெளிநாட்டு லொக்கேஷன்கள் இடம் பெறுகிறது. கலர்ஃபுல்லான கதை. அதை கலர் ஃபுல்லாகவும், பவர்ஃபுல்லாகவும் எடுத்து வருகிறார் இயக்குனர் பிரபுதேவா. படம் பொங்கல் விருந்தாக வரும். அதனால் இப்போதைக்கு படத்தைப் பற்றி அவ்வளவு பில்டப் பண்ண வேண்டாம் என்றிருக்கிறோம்.
"சிவகாசி'யில் ஒரு பாடலுக்கு உங்களுடன் ஆடிய நயன்தாரா இந்தப் படத்தில் உங்களுக்கு ஜோடி, அவரைப் பற்றி?
நடிப்பு, டான்ஸ் என எல்லாவற்றிலும் அசத்தி வருகிறார். சும்மா பாடல்களுக்காக மட்டும் வருகிற ஹீரோயினாக இல்லாமல், நல்ல கேரக்டர்களில் நடிக்கவும் செய்கிறார். என்னோட சேர்ந்து காமெடியும் பண்ணி இருக்கிறார்.
விஜய் என்றாலே ஜாலி ஃபார்முலா கதைகளில்தான் நடிப்பார் என்று ஒரு அபிப்பிராயம் இருக்கிறது. இது தொடருமா?
கண்டிப்பாக தொடரும். ரசிகர்கள் இதைத்தான் என்னிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள். அவர்களுக்கு நல்ல பாடல்கள், நிறைய காமெடி, ஆக்ஷன் காட்சிகள் ஆகியவைதான் திருப்தியைத் தருகிறது. நான் கமர்ஷியல் சினிமாவுக்கு பொருத்தமானவன் என்று நினைக்கிறார்கள். அது உண்மையும்கூட! சில ஆண்டுகளுக்கு முன்பு மென்மையான பாத்திரங்களில் நடித்தேன். "திருமலை', "கில்லி', "திருப்பாச்சி' ஆகிய படங்களின் தொடர் வெற்றிகள் காரணமாக தொடர்ந்து ஆக்ஷன் கதைகளே என்னைத் தேடி வருகிறது.
நடிகர்கள் அரசியலிலும் ஆர்வம் காட்டி வரும் காலம் இது. உங்களுக்கும் அரசியலில் ஆர்வம் இருக்கிறதா?
மனிதனாகப் பிறக்கும் ஒவ்வொருவருக்கும் சமூக அக்கறையும், பிறருக்கு உதவும் நல்லெண்ணமும் அவசியம் இருக்க வேண்டும். சமூகப் பொறுப்பு உள்ளவர்கள் சினிமா துறையிலிருந்து மட்டுமல்ல, வேறு எந்தத் துறையிலிருந்தும் அரசியலுக்கு வரலாம். நான் என்னோட ரசிகர் மன்றத்திற்கு கொடியை அறிமுகப்படுத்தியது அரசியலுக்காக அல்ல. என் ரசிகர்கள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவர வேண்டும் என்பதற்காகவும், ஒரு அடையாளத்திற்காகவும்தான். இது அரசியலில் நுழைய நான் எடுத்துக்கொள்ளும் முயற்சி அல்ல. சமூக சேவைகளை செய்வதற்கான அடுத்த ஸ்டெப், அவ்வளவுதான்!
மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இல்லையா?
அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எப்போதும் இருக்கிறது. அதற்கான ஸ்கிரிப்ட்டும் நேரமும் ஒத்துவரும்போது கண்டிப்பாக நடிப்பேன். நான் அந்த நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
கதைகளைப் பொறுத்து இறுதி முடிவு எடுப்பது நீங்கள்தானா?
கண்டிப்பாக இறுதி முடிவு எடுப்பது நான்தான். என் அம்மாவும், மனைவியும் தொழில் சம்பந்தமான என் முடிவுகளில் தலையிட மாட்டார்கள். என் தந்தை என் சினிமா வாழ்க்கையில் மட்டுமல்ல, என் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சிறந்த வழிகாட்டியாக விளங்குகிறார். சின்ன விஷயமானாலும்கூட அவரிடம் ஆலோசனை கேட்டுதான் செய்வேன். ஆனால் கடைசி முடிவு என்னுடையதாக இருக்கும். என் மனைவி சங்கீதா நான் நடிக்கும் படங்களை நன்றாக விமர்சனம் செய்வார். அது சரியாகவும் இருக்கும். இப்போது காஸ்ட்யூம் விஷயத்திலும் நான் அதிக கவனம் எடுத்துக் கொள்கிறேன் என்றால் அதற்கு காரணமும் என் மனைவிதான்.
உங்கள் குழந்தைகள் பற்றி...?
என் மகன் சஞ்சய் நன்றாகப் படிக்கிறான். அவன் நிறைய படங்களைப் பார்க்கிறான். அவனுக்கு மிகவும் பிடித்த ஹீரோ நான்தான் என்று நினைக்கிறேன். இப்போது அவனுக்குப் பிடித்த பாடல், "நாக்க முக்க...' (சிரிக்கிறார்). ரெண்டாவது குழந்தை சுட்டியா இருக்கும்னு சொல்வாங்க. அதுக்கு அப்படியே பொருத்தமா செம குறும்பான தேவதையா இருக்கா என் மகள் திவ்யா. அவளுக்கு இப்போ இரண்டரை வயதாகிறது.
திரையுலகைப் பொறுத்தவரையில் உங்களுக்கு கடும் போட்டியாளராக யாரைக் கருதுகிறீர்கள்?
எல்லோரையும்தான். சினிமாவில் நுழைபவர்கள் அத்தனை பேருமே பெரிய ஆளாக வரவேண்டும் என்று நினைத்துதான் கடுமையாக உழைக்கிறார்கள். ஒவ்வொருவரையும் கவனித்து வருகிறேன். ஒவ்வொருவரிடமும் தனித் திறமைகள் இருக்கிறது. ஒவ்வொரு புதிய வரவையும் நான் போட்டியாளராகவே கருதுகிறேன். அப்போதுதான் இன்னும் கடினமாக உழைக்க முடியும்.
என்றாவது ஒரு நாள் நீங்களும் இயக்குனர் ஆவீர்கள்தானே?
இப்போதைய என் மன நிலையில் அதெல்லாம் செட் ஆகாது.
இந்த தீபாவளி திருநாளில் வாசகர்களுக்கான உங்கள் அறிவுரை என்ன?
கடினமாக உழையுங்கள். எந்த ஒரு வேலையை செய்தாலும் நூறு சதவீதம் நம்பிக்கையுடன் செய்யுங்கள். வெற்றி நிச்சயம். எல்லா வாசகர்களுக்கும் என் இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

talk me