வெள்ளி, 26 மார்ச், 2010

24 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தும் விஜய்! தொடரும் விஜயின் நற்பணி.


சுறா படம் முடிந்துவிட்டது. மீண்டும் தனது மக்கள் நலப் பணிகளை ஆரம்பித்திருக்கிறார் விஜய் . திருச்சி யில் வரும் 28ம் தேதி 24 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கிறார்.

தனது மக்கள் நல மன்றத்தின் மூலம் தொடர்ந்து பல நலத்திட்ட உதவிகளை மாவட்டம் தோறும் செய்து வருகிறார் நடிகர் விஜய்.

ஒவ்வொரு படம் முடிந்து அடுத்த படம் துவங்குவதற்குள் இந்தப் பணிகளை செய்து முடிப்பது அவரது திட்டம்.

முன்பு வேட்டைக்காரன் ரிலீசுக்கு முன் புதுக்கோட்டை, புதுச்சேரி போன்ற பகுதிகளில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள் திறந்து வைத்தார். பலருக்கு நல உதவிகள் மற்றும் பண உதவிகளையும் செய்தார்.

இப்போது அவரது 50வது படமான சுறா முடிந்து ஏப்ரல் 14ம் தேதி ரிலீசாகிறது.

இந்நிலையில் வரும் மார்ச் 28ம் தேதி ஞாயிற்றுக் கிழமை திருச்சிக்கு வருகிறார் விஜய். அப்போது இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையங்களைத் திறந்து வைக்கிறார்.

24 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கிறார். திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் அன்று காலை 9.30 மணிக்கு இந்த நிகழ்ச்சிகள் நடக்கும்.

புதுமணத் தம்பதிகளுக்கு தனது செலவில் சீர் வரிசைகளும் வழங்குகிறார். அவரது தந்தை இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரன் திருமண சான்றிதழ்கள் வழங்குகிறார்.

திருமண விழாவிற்கு அமைச்சர் கே.என். நேரு, தலைமை தாங்குகிறார். அமைச்சர் செல்வராஜ், முன்னிலை வகிக்கிறார். மேயர் சுஜாதா, துணைமேயர் அன்பழகன், சிவா எம்.பி. அன்பில் பெரியசாமி எம்.எல்.ஏ. ஆகியோர் வாழ்த்திப் பேசுகிறார்கள்.

விழா ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட விஜய் நற்பணிமன்ற தலைவர் ராஜா தலைமையில் ரசிகர் மன்றத்தினர் செய்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

talk me