திமுகவில் சேர்ந்தால் நாம் விஜய் படங்களை ஆதரிப்போமா? தேர்தலுக்காக தமிழீழம் என்று கூறிய ஜெயலலிதாவை ஆதரித்தால் சரியா?
கனடாவில் உள்ள தமிழ்ச் சங்கமொன்று விஜய் நடிக்கும் படங்களை பகிஷ்கரிக்க வேண்டும் என்று கோரியுள்ளதாக தமிழகத்தில் உள்ள இணையத்தளங்களும், பத்திரிகைகளும் பரபரப்பு செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. கனடாவில் இருந்து வெளியிடப்பட்ட ஒரு சங்கத்தின் கருத்தை ஒட்டுமொத்த ஈழத் தமிழினத்தின் கருத்துப் போல திரித்து விடுவதில் இவை ஏறத்தாழ வெற்றி கண்டுள்ளன.
கடந்த காலங்களில் உணர்ச்சிகரமான ஒரு விடயம் வந்தால் ஏனென்று கேள்வி கேட்காமல் தமிழ் ஊடகங்கள் மௌனமாக இருப்பது வழமை. ஆனால் இன்றுள்ள நிலையில் அவ்வாறான பயணம் ஈழத் தமிழினத்தின் எதிர் காலத்திற்கு நன்மை பயக்காது என்பதே உண்மை.
ஆகவே நடிகர் விஜய் விடயத்தை ஒரு புதிய கோணத்தில் திருப்பிப் பார்க்கிறோம். அதற்காக விஜய் காங்கிரசில் சேருவதை நாம் ஆதிரிக்கிறோம் என்று கருதிவிடாதீர்கள் முதலில் இங்குள்ள கேள்விகளை மட்டும் பாருங்கள்.
கேடுகெட்ட காங்கிரசோடு விஜய் சேர்வது தவறென்றால்…
01. மு.கருணாநிதி தலைமையிலான திமுகவில் சேர்ந்தால் நாம் விஜய் படங்களை ஆதரிப்போமா.. மு.கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோதுதான் ஈழத்தில் தமிழினமே வேரோடு அறுத்து வீசப்பட்டிருக்கிறது. காங்கிரசிற்கும், திமுகவிற்கும் என்ன வேறுபாடு..
02. விஜய் ஜெயலலிதா அம்மையாரின் அதிமுகவில் சேர்ந்தால் அவருடைய திரைப்படங்களுக்கு நாம் ஆதரவு கொடுப்போமா? ஜெயலலிதா அம்மையார் தேர்தலின்போது ஈழம் அமைப்பேன் என்று பிரச்சாரம் செய்தார். புலம் பெயர்ந்த தமிழர்கள் தாயே ! பராசக்தி என்று அவருக்கு வாழ்த்து மடல்களை எழுதிக் குவித்தார்கள்.
கடந்த காலங்களில் காங்கிரசோடு சேர்ந்து ஜெயலலிதா செய்ததை எல்லாம் அவர்கள் கணப்பொழுதில் மறந்தார்கள். இப்போது ஜெயலலிதா என்ன செய்கிறார்? வன்னியில் அடைபட்டுள்ள மக்களுக்காக எங்காவது ஓர் ஆர்பாட்டத்தை நடாத்தினாரா ? இல்லையே.
தேர்தலுக்காக தமிழ் மக்கள் காதில் பூ சுற்றிய ஜெயலலிதாவுடன் சேர்வதுதான் சரியா? ஈழத்தமிழர் விடயத்தில் ஜெயலலிதாவுக்கும் மு.கருணாநிதிக்கும் காங்கிரசிற்கும் என்ன வேறுபாடு ? இந்த இரண்டு கட்சிகளும் வடஇந்தியரின் கட்சிகளல்ல.. தமிழ்க்கட்சிகள். ஏற்கெனவே விஜய்யின் தந்தை சந்திரசேகர் திமுகவில் இருந்து அவரால் எதையும் செய்ய முடியாது போய்விட்டது.
ஈழத் தமிழர் விவகாரத்தில் அவர் தொடர்ந்து ஏதோ செய்து வருவதை மறுக்க முடியாது. நடிகர் விஜய் ஓர் ஈழத் தமிழ் பெண்மணியை மணந்துள்ளார் ஆகவே நாம் அவரை வாழ்த்துகிறோம் என்று புலம் பெயர் தமிழர் எழுதிக் குவித்த பாராட்டுக்களை நாம் மறந்துவிட முடியாது.
மேலும் அவர் ஈழத் தமிழருக்காக தமிழகத்தில் பல போராட்டங்களை நடாத்தியவர். அப்படிப்பட்ட ஒருவர் காங்கிரசில் சேர்வது ஈழத் தமிழரை விற்பதற்கு என்று நாம் எப்படி ஒரேயடியாக முடிவு செய்யலாம். காங்கிரஸ் போன்ற ஒரு கட்சியை ஈழத் தமிழருக்கு சார்பாக சிந்திக்க வைக்க மு.கருணாநிதியாலோ, ஜெயலலிதாவாலோ, தங்கபாலுவாலோ, ஜி.கே. மூப்பனாரின் மகனாலோ முடியாமல் போய்விட்டது.
அப்படிப்பட்ட நிலையில் விஜய்யாவது காங்கிரசின் குரோத மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முயல்வார் என்று நாம் ஏன் சிந்திக்கக் கூடாது? அப்படியொரு நம்பிக்கையான கோணத்தில் நாம் ஏன் சிந்திக்க மறுத்து அவருடைய திரைப்படங்களின் பொருளாதாரத்தில் மண்ணள்ளி வீச முற்பட வேண்டும்.
விஜய் சிறந்த நடிகர் மட்டுமல்ல சிறந்த கருத்துக்கள் உள்ள இளைஞரும் கூட. எம்.ஜி.ஆர் காங்கிரசை ஆதரித்தபடியே ஈழத் தமிழருக்கு உதவியதைப் போல அவரும் உதவ எண்ணியிருக்கலாம். அவருடைய உள்ளத்தை நாம் சரியாக அறியாமல் அவசரப்படுவது சரியா ? விஜய் உண்மையாக காங்கிரசில் சேரப் போகிறார் என்றால் நமது கடமை என்ன ? அவருடன் நாம் கதைக்க வேண்டும். எமது கருத்துக்களை கூற வேண்டும். அதில் எதையாவது, யாராவது செய்தோமா ? அப்படிச் செய்யாமலே நாம் அறிக்கை விடுவது சரியா? உண்மையாகவே விஜய் காங்கிரசில் சேர்ந்துவிட்டாரா, அவர் காங்கிரசில் சேர்வதற்கு என்ன நிபந்தனை வைத்தார், அவருடைய அரசியல் கொள்கை என்ன இவைகளை அறியாமல் இப்படியான கருத்துக்களை முன் வைப்பது சரியா? நாம் பெரிதும் பாராட்டும் தமிழ் ஈழ விரும்பி டாக்டர் ராமதாஸ் அவர்களின் மகன் டாக்டர் அன்புமணி தேர்தலுக்கு சில மாதங்கள்வரை காங்கிரஸ் அமைச்சில் இருந்தார்.
அப்போது மட்டும் காங்கிரஸ் தூய அமைப்பாக இருந்ததென நாம் கருதுகிறோமா? பகிஷ்கரிப்பு, தடை இவைகளுக்கு மேல் ஆரோக்கியமாக ஒரு விடயத்தை அணுக நாம் என்றாவது முயற்சித்திருக்கிறோமா..
முயற்சித்திருந்தால் அவை எவை ? இந்த இரண்டில் எது நமக்கு நன்மை தந்திருக்கிறது ? இவைகளை ஒப்பிட்டு என்றாவது ஒரு கருத்துக் கணிப்பை மக்களிடையே நடாத்தியிருக்கிறோமா ? விஜய்க்கு தமிழகம் முழுவதும் ஏராளம் ரசிகர்கள் இருக்கிறார்கள். புலம் பெயர் நாடுகளிலும் அவருக்கு ஏராளம் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர்களை எல்லாம் ஈழத் தமிழினத்திற்கு எதிரான பக்கத்தில் திருப்பும் வேலையை நாம் செய்கிறோமா என்று சிந்தித்தோமா ?
விஜய் படங்களை பகிஷ்கரிக்கப் புறப்படும் நாம் பல ஈழத் தமிழர் படங்களே பகிஷ்கரிக்கப்பட்டபோது ஏன் மௌனமாக இருந்தோம். கலைஞர் ரீவியை பகிஷ்கரிப்போம், சன் ரீவியை பகிஷ்கரிப்போமென பலர் அறிக்கை விட்டார்கள். அதை சாத்தியமாக்க முடிந்ததா ? சிறீலங்காவின் பொருட்களை பகிஷ்கரிப்போம் என்றோம் சிலோன் ரீயை நம்மால் விட முடிந்ததா? மற்ற நாடுகளி; உள்ளுர் அரசியல் விடயத்தில் நாம் தலையிடக்கூடாது என்று ஈழத்தின் தமிழ் தலைவர்கள் பலர் தொடர்ந்து கூறியுள்ளார்களே அதை நாம் ஏன் செவிமடுக்க மறுக்கிறோம். ந
மது மனதை களங்கம் இல்லாத சுயநலமற்ற இடத்தில் வைத்து இந்தக் கேள்விகளை கேட்டால் நமக்கு என்ன பதில் கிடைக்கும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். மேலும் தமிழகத்தில் இருக்கும் பத்திரிகைகள் இனியும் சிறுபிள்ளைத்தனமாக நடக்கக் கூடாது. இவ்வளவு பெரிய இழப்புக்களை சந்தித்த ஈழத் தமிழினம் இருப்பது வெளிநாடுகளில் அல்ல வவுனியா சிறைக் கொட்டடியில். நாம் சிறுபிள்ளைத்தனமாக அந்த மக்களின் வாழ்வோடு விளையாடக் கூடாது. இலங்கை மண்ணில் தமிழர்களின் வாழ்வின் அடுத்த கட்டம் என்ன என்ற கேள்விக்கு பதில் அவர்களிடமிருந்தே வரவேண்டும் என்ற சிறிய விடயம் கூட தெரியாமல் தமிழகப்பத்திரிகைகள் இப்படி நடப்பது சரியா என்பதையும் நாம் மனதில் கேட்டுப்பார்க்க வேண்டும்.
புதன், 2 செப்டம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்து:
yosikke vendiya visayamtan!!!
கருத்துரையிடுக
talk me