சனி, 24 மே, 2008

குமுதம் விமர்சனக் குழு


கொஞ்சம் காரம். நிறை வீரம். கதைக்குத் தகுந்த மாதிரி குடும்ப பாரம். இந்த மூன்றும் கலந்து வந்திருக்கிறது. குருவி. கில்லியில் சொல்லி அடித்த விஜய் - தரணி கூட்டணி இப்போது குருவியை களத்தில் இறக்கியிருக்கிறது.. இந்த முறை விஜய் ஆந்திர வில்லன்களுடன் மோதுகிறார். பொலிவான முகமும் முறுக்கேறிய உடலுமாய் படம் முழுக்க வலம் வரும் விஜய்யிடம் சூப்பர்கிங் உற்சாகம். எடையைக் குறைச்சுட்டா ச்சும்மா சுறுசுறுன்னு குருவி மாதிரி ஆயிரலாம்னு விஜய்க்குத் தெரிஞ்சிருக்கும் போல.படம் முழுக்க ஸ்லிம் அண்ட் ஸ்லீக்காக வருகிறார். வீட்டில் சாவு விழுந்தால் கூட தயங்காமல் டூயட்டைத் தொடர்கிற வழக்கமான ஹீரோயினாக த்ரிஷா. அடுத்தடுத்து வெட்டும் குத்தும் நடந்து கொண்டிருக்கும் வேளைகளிலும் என்னை லவ் பண்றியா? என்று விஜயை அவர் துரத்தும் காட்சிகளில் நமக்கு எரிச்சல்தான் ஏற்படுகிறது. அடிக்கடி விஜய்யின் கையை பிடித்தக் கொண்டு ஒடி கில்லி எ ஃபெக்ட்டைத் தர மட்டுமே பயன்பட்டிருக்கிறார் த்ரிஷா.ஹீரோ, ஹீரோயின் இப்படியிருக்க கதை மலேசியாவை நோக்கிப் போகிறது. விஜய்யின் அப்பா மணிவண்ணன் கடன் சுமை தாங்காமல் வீட்டை விட்டு ஓடிப்போக குடும்பத்திற்கென்று மீதியான ஒரே சொத்து வீடு. அதையும் அப்பா கொடுத்த செக் பவுண்ஸ் ஆன கடனுக்காக பிடுங்கப்பட இருக்க கெடு வாங்கிக் கொண்டு செக் கொடுத்த மலேசிய கம்பெனிக்கு அப்பாவின் கடனை வசூல் செய்ய குருவியாக பறக்கிறார்கள் விஜய்யும் நண்பர் விவேக்கும். கதை அங்கே சூடு பிடித்திருக்க வேண்டும். ஆனால் குருவிதானே அதிக உயரம் பறக்க இயலவில்லை. ஏகப்பட்ட பில்டப்புகளுடன் வில்லன்கள் வந்தாலும், படத்தில் விறுவிறுப்பு மிஸ்ஸிங்.அதிரடியாய் அறிமுகமாகும் சீனியர் வில்லனான சுமன் பாதிப் படத்திலேயே விஜய் அடித்து வீல் சேரில் உட்கார வைத்து விடுகிறார். எம்.எல்.ஏ. வாக வரும் ஆசிஷ் வித்யார்த்தி அடிமைத் தொழிலாளர்களை வைத்திருப்பதும் நினைத்த மாத்திரத்தில் அவர்களை சுட்டுக் கொல்வதும் போலீஸ் கைத்தடிகள் போல நடத்துவதும் சினிமாவில் மட்டுமே சாத்தியமான காட்சிகள். ஏதோ தெலுங்கு படம் மாதிரி போய்ட்டிருக்கே? என்ற நம் சந்தேகத்தை வில்லனகள் அனைவரும் ஆரம்பம் முதல் கடைசி வரை தெலுங்கில் பேசி உறுதிப்படுத்திவிடுகிறார்கள். குவாரியிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்ற முயலும் இளவரசு ஒரு நல்ல குணச்சித்திர நடிகராக மனதில் இடம் பிடிக்கிறார்.சரண்யா, மணிவண்ணன், நாசர் (சிறப்பு தோற்றம்) போன்றோருக்கு நடிக்க வாய்ப்பே இல்லை.விஜய்-விவேக் கூட்டணியில் வரும் காமெடி காட்சிகள் கோடை வெயிலில் தர்பூசணி சாப்பிடுவது போல் இருக்கின்றன. மேற்கத்திய இசையும் நாட்டுப்புறப்பாட்டும் கலந்து ஒலிக்கும் ஹேப்பி நியூ இயர் பாடல் இசையமைப்பாளர் வித்யாசாகரை தரணிக்கு சூப்பர் ஜோடி என சொல்ல வைக்கிறது. ஆனால் விஜய்யின் அறிமுகப் பாட்டு... விஜய்க்கான குத்து மிஸ்ஸிங்...கொத்தடிமைத் தொழிலாளர்களை மையமாகக் கொண்டிருந்தாலும் அவர்களின் பிரச்னையை நச்சென்று காட்டுவது போல ஒரு காட்சி கூட இல்லாதது திரைக்கதையில் மிகப் பெரிய பலவீனம். முதல் பாதியில் காமெடி கலக்கலாகப் போகும் கதை பின்பாதியில் ரத்த மயமாகிறது. கில்லியின் வேகத்தை தொட்டுவிடவேண்டுமென்று தரணி முயன்றிருக்கிறார். ஆனால் அது தொட இயலாத அசுர வேகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

talk me